Pages

புறம் பேசாதே!


புறம் பேசாதே!

ஒரு ஊரில் ஒரு கிழவர் இருந்தார். அந்தக் கிழவருக்குத் தன் பக்கத்து வீட்டு இளைஞனைப் பிடிக்கவில்லை. எனவே, அவர் எல்லோரிடமும் அந்த இளைஞன் ஒரு திருடன் என்று தூற்றிக்கொண்டே இருந்தார். அதன் காரணமாக அவன் ஒரு திருடன், போக்கிரி என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டு விட்டது. எனவே, அப்பகுதியில் நடந்த ஒரு திருட்டில் அந்த இளைஞனை, சந்தேகத்தின் பெயரில் கைது செய்துவிட்டார்கள் காவலர்கள். விசாரணையில் நிரபராதி என்று தன்னை நிரூபித்து வெளியில் வந்த இளைஞன், அக்கிழவரின் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துவிட்டான்.
நீதிமன்றத்தில் கிழவர் வாதிட்டார். "நான் சும்மா ஏதோ ஒரு அபிப்பிராயத்தைச் சொன்னேன், அது யாருக்கும் ஒரு தீமையையும் ஏற்படுத்தக் கூடியதல்ல. என் பேச்சினால் யாருக்கும் நட்டம் இல்லை. இதையெல்லாம் பெரிது படுத்தி வழக்குத் தொடரலாமா?' என்று.

நீதிபதி அக்கிழவரிடம் 'இந்த இளைஞனைப்பற்றி நீங்கள் சொன்னதை எல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி, பின் அதைத் துண்டுதுண்டாகக் கிழித்து நீதிமன்ற வாசலில் பறக்கவிட்டு விடுங்கள்' என்று கட்டளையிட்டுவிட்டு, வழக்கை மறு நாளுக்கு ஒத்திவைத்தார்.

மறுநாள் சபை கூடியது. நீதிபதி 'நேற்று நான் சொன்னது போல் காகிதத்தில் எழுதி அதைக் கிழித்துப் பறக்க விட்டுவிட்டீர்களா?' என்று வினவினார். கிழவர் 'ஆம்' என்று பதில் கொடுத்தார். 'நீங்கள் நிரபராதி என்று நான் தீர்ப்பளிக்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை' தொடர்ந்தார் நீதிபதி, 'நீங்கள் நேற்றுச் சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் பறக்கவிட்டீர்கள் அல்லவா? அந்தத் துண்டுகளை எல்லாம் மீண்டும் பொறுக்கி எடுத்துவர வேண்டும்'.

கிழவர் திடுக்கிட்டார். 'அது எப்படி முடியும்? அது நேற்றே காற்றில் பறந்து போய்விட்டிருக்குமே!' என்றார்.

'புரிந்ததா உங்களுக்கு? நீங்கள் இந்த இளைஞன் மீது கூறிய அவதூறுகளும் அப்படித்தான். நீங்கள் பேசிய வார்த்தைகளும் அப்படித்தான். தேவையற்று நீங்கள் இந்த இளைஞன் மீது சுமத்திய பழிகள் அவனுடைய மரியாதைக்கு ஊறு விளைவித்துவிட்டது. நீங்கள் வீசியெறிந்த காகிதத்துண்டுகளை எப்படி மீண்டும் பொறுக்க இயலாதோ, அதே போல், உங்கள் பேச்சினால் அவனுக்கு விளைந்த அவமரியாதையையும் துடைக்க இயலாது. உங்களால் முடிந்தால் பிறரைப்பற்றி நல்லது சொல்லுங்கள். இல்லாவிடில் குறைந்தபட்சம் அவதூறு சொல்லாமல் இருங்கள்.' என்ற நீதிபதி, இளைஞனுக்கு நேர்ந்த மன உளைச்சலுக்கு கிழவர் நட்ட ஈடு வழங்கவேண்டுமெனத் தீர்ப்பு வழங்கினார்.

ஆம். புறங்கூறுவது என்பது ஒரு குற்றம். ஆனால், நாம் பலரும் மிக எளிதாக அக்குற்றத்தைச் செய்கின்றோம். பக்கத்து வீட்டுக்காரர், உடன் படிக்கும் மாணவன், அலுவலகத்தின் சக ஊழியர் என்று யாரையும் நாம் விட்டு வைப்பதில்லை. நமது இந்தப் புறங்கூறும் வேலையைத்தான் 'ஊடகங்கள்' திறம்படச் செய்து பணம் சம்பாதிக்கின்றன. எந்த நடிகர் எந்த நடிகையுடன் பேசினார், எந்த விளையாட்டு வீரர் மனைவியுடன் சண்டை போட்டார், எந்த அரசியல்வாதி எந்தத் தொழிலதிபர் வீட்டில் மதுபான விருந்தில் கலந்துகொண்டார்' என்ற வகையான கிசுகிசுக்கள்தானே நம்மை ஈர்க்கின்றன. நம் அளவிற்கு நாம் பக்கத்து வீடு, எதிர்வீட்டைப்பற்றிய கிசுகிசுக்களைப் பரப்புகிறோம். நம்மைப்பற்றியும் சிலர் இப்படிப்பேசக்கூடும் என்பது நமக்கு மறந்து விடுகிறது.

ஆனால் மக்களின் இயல்பை நன்கு அறிந்த வள்ளுவரோ
'பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்', என்கிறார். (புறங்கூறாமை- குறள் எண் -186) உண்மைதான். பிறர்மீது பழி சொல்லிக்கொண்டிருப்பவர் குற்றங்களை அலசி அவர்கள் மீது இன்னும் பெரிய பழியாகச் சுமத்தப் பிறர் காத்துக்கொண்டிருப்பார்கள் என்ற வள்ளுவர் சொல் உலக இயல்பை தெளிவாக்குகிறது.

"புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.' (புறங்கூறாமை- குறள் எண் - 183) என்று புறங்கூறுபவர்களைச் சாடுகிறது தமிழ்மறை. பிறரைப்பற்றிப் பழி சொல்லிக்கொண்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் செத்துப்போவது மேலானது என்று இவர்களைப்பற்றிக் கருதுகிறார் வள்ளுவர். இன்னும் என்னென்ன சொல்கிறார் தெரியுமா?
'அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது' என்பது அவர் எண்ணம். (புறங்கூறாமை- குறள் எண் - 181) ஒருவன் அறத்தைப் பின்பற்றாதவனாக இருந்தாலும் பரவாயில்லை. அவன் பிறர் இல்லாதபொழுது அவர்கள் மீது பழிச்சொல் கூறவில்லையானால் அவன் நல்லவனே.

சரி, புறம் பேசாமல் இருப்பது எப்படி. நமது நாவை நாமே கட்டுப்படுத்துவது எப்படி?

அதற்கும் வழி சொல்லிவிட்டார் வள்ளுவர்.

"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு' என்று. (புறங்கூறாமை- குறள் எண் - 190) பின்னாளில் 'பிறர் மீது உள்ள தூசியைப் பார்க்குமுன், உன் முதுகில் உள்ள உத்திரத்தைப் பார்' என்று பல நூற்றாண்டுகளுக்குப் பின் இயேசுபிரான் மொழிந்ததை 'பிறர் குற்றங்குறைகளைப்பார்ப்பது போல் மக்கள் தங்கள் குறைகளையும் பார்ப்பார்களானால் எவ்வளவு நன்மை உண்டாகும்?' என முன்மொழிகிறார் வள்ளுவர்.

பாரதியும் 'பொய் சொல்லக்கூடாது பாப்பா' என்று சிறு குழந்தைக்கு அறிவுரை சொன்ன சூட்டோடு 'என்றும் புறஞ்சொல்லலாகாது பாப்பா' என்றும் கூறிவிடுகிறார். சின்னக் குழந்தைக்கே இந்த அறிவுரை எனில், வளர்ந்த, படித்த நாம் இத்தவறைச் செய்யலாமா?

நன்றி - ஈழநேசன்

Read Users' Comments (0)